Thursday, February 09, 2012

நீரும் தமிழரும் – 2


சென்ற பதிவில் நீர் வழி பாதைகளில் ஒரு விஞ்ஞானம் இருந்ததாக கூறினேன் அல்லவா? அது என்னவெனில் ஒவ்வொரு ஏரி, கண்மாய் , மற்றும் குளங்களில் (அதாவது நீரை தேக்கி வைக்கும் இடங்களில் ) நீர் துறை என்ற ஒன்று இருக்கும், அதன் வழியாகவே நீர் அடுத்த இடத்திற்கு ஓடும்! அப்படிப்பட்ட துறைகளில் மதகு வைத்து அடைப்பார்கள்(நீரை தேக்கி வைக்க). இந்த மதகுகளில் தான் ஒரு விஞ்ஞானம் இருந்தது. கடைமடை பகுதிகளுக்கும் நீர் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்த முறை பயன்படுத்தப்பட்டது.
என்னவெனில் நீர் வரத்தை பொருத்து இந்த துறைகளில் அடைப்பின் அளவை முடிவு செய்வார்கள் அதாவது, முதல் ஏரியின் கொள்ளளவு 100 சதவிகிதம் என்றால் நீர் வரத்தை பொருத்து 50 சதவிகிதம் வரை மட்டுமே நிரம்பும் அளவுக்கு மதகின் அளவை நிர்ணயிப்பார்கள், அப்படியே அடுத்த அடுத்த இடங்களிலும் குறைவான அளவை வைத்துக் கொண்டு கடைமடை பகுதிக்கு நீர் செல்லும் வரை பொறுத்திருப்பார்கள். கடைசி ஏரி/கண்மாயின் அளவு 80 சதவிகிதம் என்று நிர்ணயித்திருப்பார்கள். அதாவது முதல் ஏரி 50 சதவிகிதம் நிரம்பி, வழி வழியாக எல்லா நீர் கொள்ளுமிடங்களும் 50 சதவிகிதம் நிரம்பி கடைசி இடத்தில்,அதாவது கடலிற் கலக்கும் முன்பு இருக்கும் நீர் தேக்கத்தின் அளவை 80 சதவிதமாக்கி, அதன் பின்பு கடைமடை பகுதியில் இருந்து பின்னோக்கி ஒவ்வொரு தேக்கத்திலும் 80 சதவிகிதம் வரும் படி மதகின் அளவை அதிகரிப்பார்கள். இப்பொழுது முதல் நீர் தேக்கமானது கடைசியாக 80 சதவிகிதம் நிரம்பும். ஆக எல்லா நீர் தேக்கங்களும் 80 சதவிகித கொள்ளளவை எட்டும்.நீர் வரத்து தொடர்ந்து இருந்தால் முன் சொன்ன முறையிலேயே எல்லா தேக்கங்களும் முழு கொள்ளளவையும் எட்டும் படி பின்னோக்கி மதகுகளை அடைத்து வருவார்கள்.எல்லா தேக்கங்களும் நிறைந்து விட்டால் நீர் இறைத்து தற்காலிக சேமிப்பாக குட்டை எனப்படும் சிறு குளங்களில் சேமிப்பார்கள். அதையும்  மீறி நீர் வந்தால் அதுதான் கடலுக்கு.
ஏன் இப்படி செய்கிறார்கள் ? முதலில் உள்ளதை முதலில் நிரப்பி பின்னர் அடுத்த இடத்திற்கு அனுப்ப வேண்டியது தானே ? அப்படி செய்தால் ஒரு வேளை, நீர் வரத்து குறைந்து விட்டால் கடைமடை பகுதிக்கு நீர் எட்டாமலே போய்விடும், அது மட்டுமல்லாது நீர் வழித்தடங்களில் ஏற்படும் இழப்பும் (உறிஞ்சப்படுதல், ஆவியாதல் முதலான இழப்பீடு) கடைமடை பகுதியின் நீர் பங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனாலயே இந்த பின்னோக்கு முறை, அதாங்க ஆங்கிலத்தில் REVERSE ENGINEERING.
இப்போ ஒரு கேள்வி எழலாம்: கடைமடை பகுதிகளுக்கு நீர் சென்ற பின், ஒன்றன் பின் ஒன்றாக மதகை அடைக்கும் போது…ஆதி அணையில், நீர் மிகவும் குறைந்த நிலைக்குச் சென்று விட்டால், கதி என்ன?
முதல் நீர் தேக்கமானது அளவில் பெரியதாக இருக்கும், இரண்டு காரணங்களுக்காக, ஒன்று ஆற்றில் இருந்து நேரடியாக நீரை இதுவே முதலில் உள்வாங்க வேண்டும் என்பதால், வெள்ளக்காலங்களில் ஆற்றில் பெருக்கெடுக்கும் நீரை உள்வாங்கி கொள்வதற்காகவும், பஞ்ச காலங்களில் கடை மடை பகுதிகளின் நீர் தேவையை கொஞ்சமேனும் ஈடுகட்ட வேண்டியும், இந்த தேக்கங்களின் கொள்ளளவை மேலிருந்து கீழாக பெரியதில் இருந்து சிறயதாக இருக்கும்படி அமைத்திருப்பார்கள். மேலும் ஆதி அணையின் முதல் கொள்ளலவானது பாதி நிரம்பிய நிலையிலே அதனால் பாசன வசதி பெறும் பகுதிகளின் நீர் தேவையை பூர்த்தி செயுய்ம் அளவில் இருக்கும், மீதி பாதி என்பது சேமிப்பு கணக்கு.(savings account with in a savings account). இப்போது என்ன செய்கிறார்கள் என்றால் பெரிய சில நீர் தேக்கங்களை உருவாக்கி விட்டு அங்கு நீரை சேமித்து வைத்து கொண்டு பின்பு எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறார்கள்! இதில் பிரச்சனை என்னவென்றால் கடைமடைக்கு நீர் சேருவது குதிரை கொம்புதான்!
இது பொது அறிவு தானே(Common Sense)! ஏதோ ஒரு விஞ்ஞான முறை இருக்கு என்றாயே அது என்ன என்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்க!தற்கால தடுப்பணைகளில் இருக்கும் மதகுகளை யாரவது பார்த்திருக்கிறீர்களா? எப்படி இருக்கும் என்ற நினைவு இருக்கிறதா? திருகு கம்பிகளின் மூலம் மேலிருந்து கீழாக இயக்கப்படும் இரும்பு சட்டங்கள்(கதவு மாதிரி)நினைவுக்கு வருகிறதா? இல்லாவிட்டால் படங்களை பாருங்கள்
முதல் படத்தில் உள்ளது தான் தற்கால மதகு, இரண்டாவது கொஞ்சம் நவீனம், மூன்றாவது இன்னும் புதியது. இந்த மூன்றுக்குமே ஒரு ஒற்றுமை என்னவென்றால் குறிப்பிட்ட அளவு அணை நிரம்பிய பிறகே இங்கு மதகுகளுக்கு வேலை, அதாவது முக்கால் பங்கு கொள்ளளவு வந்த பிறகு இந்த மதகுகளின் மூலம் நீரின் வேகத்தை கட்டுபடுத்த முடியும். இவை நீரின் வேகத்தை மட்டுபடுத்த மட்டுமே பயன் தருகிறது, நீர் சேமிப்பை அணையின் உயரம் தான் 80% தீர்மானிக்கிறது. அதனால் தான் பெரிய அணை கட்டி நீரை தேக்கி பின் அனுப்பி வைக்கிறார்கள்.இதன் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும், மற்ற படி மிகச்சிறந்த நீர் மேலாண்மையா? என்றால் கிடையாது என்பதே பதில்.ஏனெனில் ஒவ்வொரு முறையும் அணை திறக்கப்படுவதை எதிர்பார்த்து விவசாயம் செய்ய வேண்டும்.அதிலும் கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் சென்று சேர்ந்து அதில் அவர்கள் விவசாயம் செய்வது எட்டாவது அதிசயம் தான்.
நம் முன்னோர்கள் கையாண்ட முறையில் நீர் வரும் போதே எல்லா இடங்களுக்கும் அனுப்பி அங்கங்கே தேக்கி வைத்து கொண்டு அவரவர் தேவைக்கு பயன்படுத்தி கொண்டார்கள். பண்டைய மதகுகள் உறுதியான மரங்களால் ஆன தனி தனி சட்டங்கள்(அதாவது ஒரு மதகில் ஐந்து அல்லது ஆறு தனித்தனி மரப்பலகைகள் இருக்கும், மரச்சட்டங்களின் உறுதி குறையும் போது புதிய சட்டங்கள் போடப்படும்) ஒவ்வொரு பலகையாக உயரத்தை அதிகரிக்க அதிகரிக்க, நீர் தேக்கங்களின் கொள்ளளவு அதிகரிக்கும். இதன் மூலம் தான் நாம் முன்னமே விளக்கியபடி கடை மடை பகுதிக்கும் நீர் சென்று சேர்வது உறுதி செய்யப்பட்டது. அதாவது மேலிருந்து கீழிறங்கும் தற்கால மதகுகளை காட்டிலும், கீழிருந்து ஒவ்வொரு படியாக மேலேறும் அக்கால மதகுகள் ஒரு விஞ்ஞானமே! அது புரியாமல் பலமாக்குகிறோம் என்ற பெயரில் மரத்தாலான சட்டங்களை எடுத்துவிட்டு இரும்பு தகுடுகள் தந்து, பண்டைய அறிவை இழந்துவிட்டோம்.
நதி/நீர்வழித்தடங்களில் உள்ள இடங்களின் விவசாயத்திற்கு ஆதாரமான நீர் பற்றி பார்த்தாகியது, இனி வானம் பார்த்த பூமிகளின் விவசாயமும், அக்கால மழை நீர் சேமிப்பும் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் ….
இந்த பதிவில் எதாவது விளங்கவில்லையா ? எனில் கேளுங்கள், விளக்கி நானும் விளங்கி கொள்கிறேன்!
கொசுறு: தமிழகத்தின் நீர் வழித்தடங்கள் யாவும் இப்போது மெல்ல மெல்ல, இல்லை இல்லை வேக வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்த ஏராளமான ஏரிகள் எல்லாம் அழிக்கப்பட்டு இன்று கட்டிட காடுகள் ஆகிவிட்டன. ஏரி/சேரி என சென்னையில் முடியும் ஒவ்வொரு பகுதியும் நீர் ஓடிய தடங்கள் தான், இன்று மக்கள் வாழ்விடங்களாய்! அப்புறம் மழை பெய்தால் வெள்ளம் வருதுன்னு போராட்டம், வெயில் காலங்களில் குடிக்க தண்ணீர் இல்லையென போராட்டம்! சென்னை ஒரு உதாரணம் தான், எல்லா ஊர்களிலும் இதுதான் எதார்த்தம். இதை தடுப்பதற்கு முறையான சட்டங்கள் இல்லை, இருப்பவையும் யானை போகுமளவுக்கு ஓட்டை நிரம்பியவை. இருப்பதை தொலைத்து விட்டு,இல்லை அழித்து விட்டு, அண்டை மாநிலத்தானிடம் உரிமைக்கு போராடி கொண்டிருக்கிறோம்.
படங்கள் உதவி: Wikipedia.org, Google.com
- எடு சாட்டை

மூன்றாம் பாகம் - நீரும் தமிழரும் – ௩(3)

No comments:

Post a Comment